யாழ்ப்பாணம் பல்கலை, கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

Thursday, November 26th, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தகவல் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டுமுதல் கலைப்பீட மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமது கற்கைகளைத் தொடரமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கலைப்பீட மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன் கலைப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.

இக் கருத்திட்டத்தினுடைய பிரதான நோக்கம் கலைப்பீட மாணவர்களது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு மற்றும் அது தொடர்பான திறன்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கி கலைப்பீட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புபினை அதிகரித்தல் மற்றும் அவர்களே மற்றைய நபர்களிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பிரிவினராகவும் மாற்றுவதாகும்.

அதற்கமைய, தற்போதைய யாழ் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடதிபதி கலாநிதி.சுதாகர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கபிலன் ஆகியோர் கலைப்பீட மாணவர்களுக்கெனத் தனியான தகவல் தொழில் நுட்பத்துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, நடைமுறை உலகுக்கேற்றவகையில் தமது அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

இக்கருத்திட்டத்தின் பிரகாரம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறைக்குரிய கட்டிடம் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருப்பதுடன், ஏனைய உதவிகளையும், வழிகாட்டல்களையும் துணைவேந்தர் வழங்கி வருகிறார்.

அத்துடன் தகவல் தொழில்நுட்பத்துறை ஆரம்பிக்கப்பட்டவுடன் மாணவர்கள் தமது பட்டயக்கல்வியை கற்கும் சம காலப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத்தில் சாதாரண சான்றிதழையும், டிப்ளோமா சான்றிதழையும் பெற்றுக் கொள்ள முடியும். கொழும்பு பல்கலைக்கழக கணனித்துறை தயாரித்த பாடத்திட்டத்துக் கமைவாக பாடநெறிகள் நடத்தப்படும் என துணைவேந்தரது ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: