யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்பு!

Monday, December 12th, 2022

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பௌதீக வள மேம்பாட்டுக்கான நான்கு முக்கிய நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நான்கு நகரங்களையும் இணைக்கும் வகையில் ஒன்பது பொருளாதாரப் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அடுத்த எட்டு வருடங்களுக்கான கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி ஊடாக நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே வெளியிட்டுள்ள அதேவேளை, நாட்டின் பிரதான வர்த்தக மற்றும் நிதிய கேந்திர நிலையமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மாநாட்டு மண்டபம், துறைமுகம், மத்தள விமான நிலையம், உலர் வலய தாவரவியல் பூங்கா மற்றும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிர்வாக வளாகம் என்பன ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஹம்பாந்தோட்டை நகர அபிவிருத்தித் திட்டம் புதுப்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலையை ஒரு பெரிய வர்த்தக நகரமாக அடையாளப்படுத்துவதற்கும், பல உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கியதற்கும் திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் முனைய அபிவிருத்தி மற்றும் கப்பல்துறை கைத்தொழில் வலயம் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே யாழ் குடாநாட்டுக்கான அபிவிருத்தித் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை நகர அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய வசதிகளை விஸ்தரித்தல், கைத்தொழில் மற்றும் தகவல்தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நான்கு முக்கிய நகர அபிவிருத்தி திட்டங்களுடன் தம்புள்ளை, கண்டி மற்றும் காலி அபிவிருத்தி முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: