யாழ்ப்பாணம் – கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு !

Friday, April 3rd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து 151 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளில் பதிவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த 151 பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், சீன பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 127 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர் மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணியவர்கள் உள்ளடங்குகின்றனர்.

சுவிஷ் நாட்டிலிருந்து அரியாலை பகுதிக்கு வந்த போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய மத குரு ஒருவரே அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த மத போதகருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் இருவர் கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் 26 வைத்தியசாலைகளில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 251 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக அதிக தொற்றாளர்கள் புத்தளம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 25 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 24 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 11 தொற்றாளர்களும், கண்டி, யாழ் மாவட்டங்களில் தலா 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனைவிட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாவட்டங்களாக காலி, கேகாலை, மட்டக்களப்பு, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளான. இம்மாவட்டங்களில் தல ஒவ்வொருவர் வீதம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: