யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து கவிழ்ந்ததில் மூவர் பேர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்!

Saturday, November 5th, 2022

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் – யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதிக் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது பேருந்து சாரதி மற்றும் பெண்ணொருவர் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தததுடன், குறித்த பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேருந்தின் சாரதி தனது பேருந்தை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரண்டு சொகுசு பேருந்துகள் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தபோது, நொச்சிமோட்டைப் பாலத்தில் முதல் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து கவிழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பின்னால் வந்த பேருந்தின் சாரதியின் சாமர்த்தியத்தால், விதியிலிருந்து வனப்பகுதிக்குச் சென்று விபத்தை தவிர்க்க முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முன்னால் சென்ற பேருந்தின் சாரதி தூங்கியிருக்கலாம் அல்லது அதிவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து காரணமாக கவிழ்ந்த பேருந்தின் சாரதி உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 17 பயணிகளில் 08 ஆண்களும் 09 பெண்களும் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 23 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஊழல் முறைப்பாடுகள் : மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் ...
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அ...
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது - தகவல் அறியும் சட்டத்தின் ...