யாழ்ப்பாணச் சமுர்த்திப் பயனாளிகளில் அரைவாசிப் பேர் அதை இழக்கும் நிலை : புதியவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டம்

Wednesday, July 19th, 2017

யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி முத்திரை தற்போது பெற்றுக்கொள்ளும் 53 ஆயிரம் குடும்பங்களில் ஆகக் குறைந்தது அரைவாசிப் பேராவது அதனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீக்கப்படும் குடும்பங்களுக்குப் பதிலாக புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 53 ஆயிரத்து 331 குடும்பங்கள் சமுர்த்தி முத்திரைகளைப் பெற்றுக்கொள்கின்றன. இதனைவிட சமுர்த்தி முத்திரை பெற்றுக் கொள்வதற்கு 44 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன. கடந்த ஆண்டு பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டுத் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

சமுர்த்தி முத்திரை ஏற்கனவே பெற்றுக்கொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பித்தவர்கள் சகலர் தொடர்பிலும் 29 விடயங்களை கவனத்தில் எடுத்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வறுமை நிலையில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கே சமுர்த்தி முத்திரை வழங்கப்படவுள்ளது. இதனால் ஏற்கனவே சமுர்த்தி முத்திரை பெற்றுக்கொண்டிருந்த அரைவாசிப் பேர் வரையில் அதனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள சமுர்த்திப் பட்டியில் பிரதேச செயலர் பிரிவு ரீதியாகச் சில தினங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

வேலணை, மருதங்கேணி, காரைநகர், நல்லூர், யாழ்ப்பாணம். நெடுந்தீவு, தெல்லிப்பழை பிரதேச செயலங்களின் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேச செயலகங்களில் பட்டியல் இரண்டொரு தினங்களில் தயாரிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

Related posts: