யாழில் மலேரியா அபாயம் – சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் எச்சரிக்கை!

Wednesday, May 3rd, 2023

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக இன்றைய தினம்   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1132 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.டெங்கு நோயால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் படைத்துறையில் பணியாற்றியவர்.

மேலும் டெங்கு நோய் வருவதற்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம் என்று ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மலேரியா நோயின் உள்ளுர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல் காரணமாக எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை. ஆனாலும் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பலருக்கு மலேரியா நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களில் 15 பேர் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: