மோசமடையும் காலநிலை : உயிரிழப்பு 13 ஆக உயர்வு ,85 ஆயிரம் பேர் நிர்க்கதி – மீட்பு உதவிப் பணிகள் தீவிரம்!
Thursday, May 24th, 2018
இயற்கை சீற்றத்தால் இதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேர்ந்த 84 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையப் பணியகம் தெரிவித்தது.
மண்சரிவு மற்றும் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 526 குடும்பங்கள் 194 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இயற்கை இடரால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நேற்று நண்பகல் வரை 13 ஆக உயர்வடைந்தது.
இடர் காரணமாக 18 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேர்ந்த 84 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வெள்ளம், மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஆயிரத்து 526 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 621 பேரை 194 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான வைத்திய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 29 வீடுகள் முற்றாகவும் 2 ஆயிரத்து 527 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நில்வள, கிங், களு, களனி, மகாவலி ஆகிய கங்கைகளும் அத்தனகல்ல ஓயா, மா ஓயா, கட்டுபிட்டி ஓயா, ரத்தஒலா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளதனால் ஆறுகளுக்கு அருகில் உள்ளோர் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வரும் நிலையில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாள்களுக்கும் மழை நீடிக்குமானால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ச்சியாக திறக்கப்படலாம்.
இடர் வலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மறு அறிவித்தல் வரும்வரை அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று இடர் முகாமைத்துவ மையப் பணியகம் கோரியுள்ளது.
Related posts:
|
|
|


