மோசடியாக முறையில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர –  ராஜாங்க அமைச்சர்  இராதாகிருஸ்ணன்!

Wednesday, August 24th, 2016

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மோசடியான முறையில் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் பரீட்சை மோசடிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய அடையாள அட்டைகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 305 மாணவர்கள் கணித பிரிவிலும், ஏனையவர்கள் வர்த்தக பிரிவிலும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் 25 பாடசாலைகளில் இந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவ்வாறு மோசடியான முறையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனுதாப அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

போலியாக தேசிய அடையாள அட்டைகளை தயாரித்துக்கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாவட்டத்தின் அடிப்படையில் மோசடியான முறையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியும்.

2013ம் ஆண்டில் விஞ்ஞான பிரிவு இல்லாத புனித சேவியர் கல்லூரியில் இம்முறை 27 மாணவர்கள் விஞ்ஞான பிரிவில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதன் மூலம் குறைந்த இசட் புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும். இதனை பயன்படுத்திக்கொள்ளவே சில வெளிமாவட்ட மாணவர்கள் போலியான முறையில் நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Related posts: