மொழியை சரியான முறையில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதே மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் தவறான புரிதலுக்கு அடிப்படை காரணம் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, December 18th, 2023

எமது நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் தவறான புரிதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மொழியை சரியான முறையில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாகும் நீதி  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் மக்களுக்கு இருந்துவரும் ஆவணங்கள் தொடர்பான சட்ட பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தேவையான ஏனைய சட்ட உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் விசேட நடமாடும் சேவை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில்  இடம்பெற்றது.

இதில்  நுவரெலியா நகரசபை வளாகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த நடமாடும் சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

வடக்கு கிழக்கில் ஒரு சிலருக்கு தாங்களை இலங்கை பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்த முடியுமான நிலைமை கூட இருக்கவில்லை.

இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியாக வாழமுடியுமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.  மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று இருக்கிறது.

என்றாலும் நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக மாத்திரம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அதனால்தான் இணக்க சபை முறைமையை ஏற்படுத்தி இருக்கிறோம். மக்களுக்கு சாதாரணமாக ஏற்படும் சட்ட சிக்கல்களுக்காக இலவச சட்ட உதவி பெற்றுக்கொள்வதற்கு சட்ட உதவி ஆணைக்குழு ஊடாக  நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் எந்த பேதமும் இல்லாமல் இதனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று நகர, கிராம மற்றும் தோட்டங்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் கல்வியை ஒரே மாதிரியாக வழங்கவேண்டும் அதற்காக அரசாங்கம் என்றவகையில் நாங்கள் புதிய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: