மே தினப் பேரணி  மே 01ஆம் திகதியே – தொழிற்சங்கங்கள் !

Friday, April 20th, 2018

மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே முதலாம் திகதியன்றே நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 29ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் என்பதால் அதனைத் தொடர்ந்து ஒரு வார காலம், வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெசாக் வாரம் நிறைவு பெற்றதும் (ஏப்ரல் 29 – மே 6) மே 7ஆம் திகதி மே தினத்தை கொண்டாடுவது என அரசாங்கம் தீர்மானித்து வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

எனினும் இந்த அறிவித்தலை ஏற்க மறுத்துள்ள கூட்டுத் தொழிற்சங்கம், மே முதலாம் திகதி மே தினப் பேரணியை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும், தேசிய தொழிலாளர்கள் ஆலோசனைச் சபையுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது அரசாங்கம் தன்னிச்சையாக மே தினத்துக்கான திகதியை தீர்மானித்துள்ளதாக கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அண்டன் மார்கஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அண்டன் மார்கஸ், “1956ஆம் ஆண்டு மே முதலாம் திகதி பொது, வர்த்தக, வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. எனினும் 62 வருடங்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் மே தினத்தை வேலை நாளில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது. வெசாக் பெளர்ணமி தின்ததையும் ஒரு காரணமாகக் கூறியது.

கொழும்பு மாநகர சபை கொழும்பில் உள்ள பொது இடங்களில் மே முதலாம் திகதி மே தினத்தை நடத்துவதற்கான அனுமதியையும் மறுத்துள்ளது. இதனூடாக அரசாங்கம் மே தினம் நடைபெறுவதை மறைமுகமாக தடுப்பதில் வெற்றி கண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின், தேசியப் பட்டியலில் உள்நுழைந்த வர்த்தகர்கள் இணைந்து மே தினத்தை நடத்துவதை தடுத்துள்ளனர். எனினும் நாங்கள் மே தினத்தை மே முதலாம் திகதி நடத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: