மெலிஞ்சிமுனை குடிநீர் பிரச்சினை: ஊர்காவற்றுறை – வேலணை பிரதேச சபை தவிசாளர்களிடையே நடைபெற்ற பேச்சுக்களில் சுமுகமான தீர்வு!

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்து சுமுகமான முறையில் பேச்சுக்களை நடத்தி ஒரு இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
நீண்டகாலமாக ஊர்காவற்றுறை பிரதேசத்தின் மெலிஞ்சிமுனை பிரதேச மக்கள் குடிநீருக்கான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்திருந்த நிலையில் அவர்களது குடி நீருக்கான பிரச்சினைக்கு தீர்வு கண்டுகொள்ளும் முகமாக இன்றையதினம் வேலணையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு குடிநீரை ஏற்றிச் செல்வதற்கு எந்த வகையிலும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் வேலணை பிரதேச சபையின் சட்ட வரைபுகளுக்கு அமையவும் வரையறை நேரமான காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக்குமான காலப்பகுதியில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் நீர் தாங்கி வாகனங்கள் குடிநீரை சாட்டிப் பகுதியில் இருந்து ஏற்றி செல்ல ஏற்கனவே உள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப அது தடையின்றி தொடரும் என்றும் வேலணை பிரதேச சபைதவிசாளரால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தனியார் எவரும் நீர் தாங்கி வாகனங்களில் நீரை சாட்டி பிரதேசத்திலிருந்து ஏற்றி செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதுடன் அவ்வாறு தனியாரது வாகனங்கள் மூலமும் நீரை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் குறித்த நீர் பவுசர் ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் குத்தகைக்கு அமர்த்தப்பட்டு அவர்களது பதிவின் கீழ் ஏற்ற முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இதனடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதி மக்களது குடிநீர் தேவைகளை ஊர்காவற்றுறை பிரதேச சபை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வடக்கு மாகாண இணைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுக்களின் போது இருபிரதேச சபைகளதும் மக்களது தேவைப்பாடுகள் மற்றும் வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சரின் இணைப்பாளர் குகேந்திரன் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|