மூத்தோரின் சேவையை மதிக்க இளையவர்கள் முன்வரவேண்டும் – யாழ்.மாவட்ட செயலாளர் கோரிக்கை!

Monday, October 17th, 2016

ஓய்வூதியர்கள் மற்றும் மூத்தோரின் சேவைகளை இளைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொண்டு, பின்பற்ற வேண்டும் என்பதுடன் மூத்தோரின் சேவைகளை கொளரவிக்கவும்  முன்வரவேண்டும் என யாழ்.மாவட்டச் அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர்கள் தமது சேவைக் காலத்தில் சமூக மேம்பாட்டுக்காக பல்வேறு சேவைகளைப் புரிந்தவர்கள். அவர்களின் அனுபவங்கள் ஆற்றல்களை சமூகம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் யாழ்.மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன். யாழ்.மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர் சகாய நிதிச் சங்கத்தின் ஓய்வூதியர் தினவிழா யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்.மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் பொ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற ஓய்வூதியர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, மாவட்டச் செயலாளர் உரையாற்றினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஓய்வூதியர் ஒன்றுகூடும்போது அவர்களின் ஆக்கபூர்வமான சமூக மேம்பாட்டுக்கான கருத்துக்கள் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றன. அக்கபூர்வமான முன்மாதிரியான யோசனைகளும் முன்வைக்கப்படும். ஓய்வூதியர்கள் தமது சேவைக்காலத்தில் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளைச் செய்து, ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் தொடர்ந்து சமூகத்துக்கு தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளை சமூகம் உரிய முறையில் உள்வாங்க வேண்டும். அவர்களின் சேவை முன்மாதிரியை இளைய தலைமுறையினர் தாங்களும் பின்பற்ற முன்வரவேண்டும். ஓய்வூதியர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பதற்கு ஏற்ற வகையில் பகிரங்க சேவை ஓய்வூதியர் சகாய நிதிச்சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இது பாராட்டத்தக்க முயற்சியாகும். ஓய்வூதியர் மூத்த பிரஜைகளின் தேவைகள், முன்னுரிமை அடிப்படையில் நிறைவு செய்யப்படவேண்டும். அதனை கருத்தில் கொண்டே விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட போதிலும் அதனைக் கருத்தில் கொள்வதில்லை என கூறப்படுகின்றது. அந்நிலை எதிர்காலத்தில் மாற வேண்டும். அவர்களுக்கான தேவைகள், சேவைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவு செய்யப்பட வேண்டும் – என்றார். 15 பிரதேச செயலகப்பிரிவு ஓய்வூதியர் சகாய நிதியச் சங்கங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வயது மூத்த ஓய்வூதியர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொன்னாடை போர்த்தி மாலை சூட்டி அன்பளிப்பு வழங்கிக் கௌரவித்தார்.

vethanayakan

Related posts: