முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!

Monday, May 14th, 2018

முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகிய உங்களுடைய சேவையென்பது மகத்துவமானதும் மதிக்கத்தக்கதுமான சேவையாகும். ஆனாலும் உங்களது சேவைக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை. இது தொடர்பில் இன்று மத்தியிலும், மாகாணத்திலும் ஆட்சியில் இருப்பவா்கள் எந்தவொரு செயற்றிட்டத்தையும் முன்னிறுத்தி உங்களது வாழ்வியலுக்கான ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதே வேதனையான விடயமாகும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நயினாதீவு ஶ்ரீ அம்பிகா முன்பள்ளி விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவா் மேலும் உரையாற்றுகையில் –

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல உதவித் திட்டங்களையும் சலுகைகளையும் பெற்றுத்தந்திருந்தார். அவர்களது சேவைக்காக ஊக்குவிப்புக் கொடுப்பனவு வளங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன்  அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஒரு தொகை ஊதியமும் வழங்கப்பட்டுவருகின்றது.

எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாகத்தான் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்பள்ளி கல்வி செயற்திட்டங்களுக்கும் அதிகளவிலான சலுகைகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் எமது சிறார்களின் கல்வி நடவடிக்கைகளில் நவீனத்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன்  நவீன வசதிகள் கொண்ட முன்பள்ளிகளை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறார்களது திறமைகள்  மேம்படுத்தப்பட வழிவகை உருவாக்கப்படவேண்டும் என்பதே எமது என்ணமாக உள்ளது.

அந்தவகையில் எமது சிறார்களுக்கு நல் வழிகாட்டிகளாக விளங்கும் முன்பள்ளி ஆசிரியா்களின் சேவையினைக் கருத்திற்கொண்டு அவர்களது நலன்கள் உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியமானது. அந்தவகையில் எமது பிரதேசத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு முடியுமானவரை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் காத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வெற்றியீட்டிய முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் தவிசாளர் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: