முன்பள்ளிகளின் சிறப்பான கல்வி செயற்பாடே சிறார்களுக்கான எதிர் கால மூலதனம் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் சுட்டிக்காட்டு!

Wednesday, August 2nd, 2023

முன்பள்ளிகளின் முறையான கற்பித்தல் செயற்பாடுகளே நமது எதிர்கால இளம் தலைமுறையினரின்  வளமான கல்விக்கான சிறந்த முதலீடாகும் என மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் கீழ் வரும் பளை பிரதேசத்துக்கான ஆரம்ப முன் பிள்ளைப் பருவ பள்ளி ஆசிரியர்களின் பௌர்ணமி விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கல்வி வலய பணிப்பாளர் விஜயநாதன் ஏற்பாட்டில்  பளை நகர இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று (2) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில் –

சிறார்கள் என்ற நிலையில் ஊட்டம் பெறும் கல்வியும் ஒழுக்கமும் தான் அவர்கள் பிறந்து வளரும்  வாழ்விடச் சூழலில் சிறந்த பண்பாளனாக  அவர்களை மாற்றியமைக்கிறது.

இதன் மூலமே ஏனையோருக்கு சிறந்த முன்னுதாரணமான தலைவர்களாக நல்ல பழக்க வழக்கங்களுடன்  வளரவும் வாழவும்  அவ்வாறே மக்களுக்கு சிறந்த சேவையாற்றவும் அவர்களால்  முடிகிறது.

இதனை கவனத்தில் கொண்டே கௌரவ அமைச்சர் அவர்களும்  ஒவ்வொரு முன்பள்ளி களினதும் சிறப்பான கல்விச் செயற்பாடுகளில் நாம் அனைவரும் மேலான கவனம் கொண்டிருக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இங்கு சமுகம் தந்திருக்கும் உங்களது கற்பித்தல் செயற்பாடுகளுக்காக கிடைக்கும் ஊதியத்தில்  நிலவும் கணிசமான ஏற்றத் தாழ்வுகள் உங்கள் பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.

விரைவில் பளை பிரதேச செயலகத்தில் அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதில் நாம் மேலான கவனம் செலுத்துவோம்  என்பதையும் இங்கு அறியத்தர விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதேச அமைப்பாளர் தோழர் ரீகன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பளை பிரதேசத்தின் கீழ் வரும் 28 முன்பள்ளிகளிலிருந்து அதில் பணியாற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

000

Related posts: