முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம் – விரைவில் நடைமுறையாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022

குறைந்தபட்சம் ஒரு மாகாணத்திலாவது அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மீற்றர் ஆட்டோக்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பாடசாலை வான் மற்றும் கொள்கலன் வாகனங்களை எவ்வாறு மேற்பார்வை செய்வது என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மீற்றர் ஆட்டோக்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், செலவு காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சற்று நிவாரணம் வழங்குவதற்காக மீற்றர் பொருத்துவது குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை மீள செயற்படுத்தவுள்ளதாகவும் வரவு – செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்காக சுமார் 800 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பேருந்து கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: