முகாம்களில் வாழும் அனைவரையும் வாக்காளர் இடாப்பில் இணைக்க நடவடிக்கை!
Monday, September 19th, 2016
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்துவரும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் இணைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அவர் மேலும் கூறுகையில், போர் காரணமாக பாதிக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படுவர்.
தகுதி உடைய அனைவரினதும் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும்.
மத்திய மலைநாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், குறவர்கள் மற்றும் வீதிகளில் சஞ்சரித்து வாழ்ந்து வரும் தரப்பினர் ஆகியோருக்கும் வாக்குரிமையை உறுதி செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஆதிவாசிகள் பலரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உள்ளடக்கப்படாத பெயர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

Related posts:
|
|
|


