மீற்றர் வட்டி சட்டவிரோதமானது – யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!

Wednesday, November 15th, 2017

கொடுத்த பணத்தை நீதிமன்றின் ஊடாக வசூலிப்பது தவறு என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார்.

மேலும் பிரமிட் வட்டி, மீற்றர் வட்டி, காசோலைக்கு பணம் கொடுப்பது, அந்தப் பணத்தை நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவது, மீற்றர் வட்டிக்கு  சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகள் போன்றன சட்டவிரோதமானவை. வங்கிகளால் வழங்கப்படும் அல்லது அறவிடப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாட்டால் ஒரு குடும்பமே காவு கொள்ளப்பட்டது. ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தைகள் இறந்துபோனார்கள். இது ஒரு வாழ்க்கைப் பாடமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், சுதுமலையில் சினிமா படமாளிகை அமைப்பதற்காக 47 இலட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவரால் பெறப்பட்டுள்ளது. அவர் அதற்குரிய பொருள்களை வழங்காமல் இழுத்தடித்துவிட்டு காசோலைகளை வழங்கியுள்ளார். அவை கணக்குகள் மூடப்பட்ட காசோலைகள். இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பொலிஸார் மூலம் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் காசோலையை வழங்கியவர் பணத்தை வழங்கவேண்டும் அல்லது 2 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பிலேயே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மீற்றர் வட்டி, நாள் வட்டி, மாத வட்டி, மற்றும் பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமானவை. அவை தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது.

அடகு பிடிக்கும் நிறுவனங்கள் அல்லது வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் வழங்கல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டவை. அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய வங்கி ஆளுநரிடம் உண்டு.

நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கினால் மத்திய வங்கிதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் தற்கொலை செய்யக் கூடாது. தற்கொலை செய்யத்தூண்டவும் கூடாது. தற்கொலை செய்யத் தூண்டுவதும் குற்றமாகும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Related posts: