மீனவர் பிரச்சினை தொடர்பாக 3 மாதங்களுக்கு ஒரு தடவை கூடி ஆராய தீர்மானம்!
Saturday, November 5th, 2016
இலங்கை- இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை, இருதரப்பும் கூடி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்ற இருநாட்டு இராஜதந்திர மட்டத்திலான பேச்சிவார்த்தையிலேயே மேற்கண்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பேச்சுவார்தை தொடர்பில்,
இருநாட்டு மீனவர்கள் விவகாரம் தொடர்பில், புதுடில்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இருநாட்டு இராஜந்திரிகள் மட்டத்திலான, பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் இராதா மோகன்சிங், இந்திய வீதிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இலங்கை தரப்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மீனவர் விவகாரம் தொடர்பில், பொறிமுறையொன்றை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வொன்று காண்பதற்கு, இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளையும் சேர்ந்த மீனவக் குழுக்கள், ஒவ்வொரு 3 மாதங்களும் கூடி ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதேவேளை, இருநாடுகளைச் சேர்ந்த மீன்பிடித்துறை அமைச்சுகளுக்கும் இடையில், இந்த விவகாரம் தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை கூட்டம் நடத்துவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், அமைச்சுகள் மட்டத்திலான முதலாவது கூட்டம், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


