மிருக பலியை தடை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை சட்ட வரைவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம் – அமைச்சர் சுவாமிநாதன்!
Sunday, September 30th, 2018
இந்து ஆலயங்களில் மிருக பலியை தடை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை சட்ட வரைவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சட்ட வரைவுக்கு உட்படுத்தும் பணிகள் சட்டவரைஞர்களினால் மேற்கொள்ளப்படுகிறது என்பதுடன் இது குறித்து சட்ட வரைஞருடன் கலந்துரையாடியதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் எதிர்வரும் 4 மாதங்களுக்குள் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக அங்கீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பழைமை வாய்ந்த மத சம்பிரதாயங்கள் என்ற ரீதியில் கருதப்படும் மிருகப்பலி பூஜை நடத்துதல் இன்னும் சில கோயில்களில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பெரும்பாலான இந்து பக்தர்கள் அதில் உடன்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கடந்த 11ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்களில் மிருகப்பலி பூஜை வழிபாடு நடத்தப்படுவதற்கு இந்தியாவில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைக்குள் ஆலயங்களில் அல்லது அதன் எல்லைப் பகுதிக்குள் மிருக மற்றும் பறவை பலிப் பூஜையை தடை செய்வதற்கான திருத்த சட்டத்தை தயாரிக்குமாறு இந்துமத அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


