மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை – உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், மீள் பிறப்பிக்கத்தக்க சக்தி வலு உற்பத்தி திட்டங்களுக்கு உதவியளிக்காமையால் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மீள் பிறப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை அனுமதி வழங்க வேண்டும். அத்துடன் அதன் பணியாளர்களுக்கான வேதனத்தை செலுத்துவதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பதை விடவும் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பணியாளர்களின் வேதனத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் ஒன்று உள்ளது.

மீள் பிறப்பிக்கத்தக்க திட்டங்கள் அல்லது உற்பத்தி செலவை குறைப்பதற்கான திட்டங்கள் எவையும் இல்லை. இதன்காரணமாக வேதனம் மற்றும் உற்பத்தி செலவுகள் என்பன நுகர்வோர் மீது சுமத்தப்படுகின்றது.

இது மாற்றப்பட வேண்டும் எனவும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை எனவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: