மின்தடையை கட்டுப்படுத்த சீட்டிழுப்பு!
Tuesday, March 29th, 2016
நாட்டில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளமையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மின் தடை பிரச்சினை வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் “விதுளி வாசனா” எனும் சீட்டிழுப்பு முறையை அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிர்காலத்தில் மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
விதுளி வாசனா சீட்டிழுப்பை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி 6000 பேரை தெரிவு செய்து பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வெற்றியாளர்களை தெரிவு செய்யும் போது, இந்த மாதத்தை விட எதிர்வரும் மாதம் 10 சதவீதம் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறித்த மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த பாவனையாளர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், 20 சதவீதம் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை மின்சார சபையே செலுத்தும் என அஜித் பி பெரேரா இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், 10 சதவீதம் தொடக்கம் 20 சதவீதத்துக்குள் மின்சாரத்தை பயன்படுத்தும் 5000 பேர் செலுத்த வேண்டிய தொகையில் 50 சதவீதத்தை மின்சார சபையே செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்பிரகாரம், எதிர்காலத்தில் மின் தடைப்படுவதை கட்டுப்படுத்தவும் பாவனையாளர்களை ஊக்குவிக்கவுமே இந்த சீட்டிழுப்பு முறை அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். எதிர்காலத்தில் ஏற்படும் மின் தேவைகளை கருதி 50000 வீடுகளுக்கு சூரிய மின் சக்தி இணைப்பினைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறு மின் கட்டணத்தை குறைத்துள்ள பாவனையாளர்கள் L(space) கணக்கிலக்கம் என்பவற்றை டைப் செய்து 1987 என்ற இலக்கத்துக்கு SMS செய்வதன் மூலம் சீட்டிழுப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
அதிக வெயில் காலங்களில் காற்று ,நீர் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியாத காலங்களில் சூரிய சக்தியில் மின்னை பெற்று கொள்வதன் மூலம் மின் தடையை தடுக்க முடியுமென அவர் கூறினார்.
அவசர காலங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தியை பெற வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறும் வேளை, அமைச்சரவையிலும் இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் தெளிவுபடுத்தினார். எனவே, இது போன்ற முன்னெடுப்புகளின் மூலம் எதிர்காலத்தில் 24 மணித்தியால மின் செயற்பாட்டை வெகு விரைவில் கொண்டுவர உள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
Related posts:
|
|
|


