மாற்றுத்தலைமையை தமிழ் மக்கள் தேடவேண்டும்.

Monday, April 10th, 2017

கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல்கால வாக்குறுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எவற்றை நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பில் மக்களின் வாக்குகளை சூறையாடி வெற்றி பெற்றிருந்த நிலையில் பதில் கூறப்பட வேண்டிய கடப்பாடு கூட்டமைப்புக்கே உண்டு என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி  தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், எவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கலாம் என்றும், மக்களிடம் எவ்வாறு வாக்குகளை அபகரிக்கலாம் என்றும் கூட்டமைப்பு தற்போது கூடி ஆராய்ந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் கூட்டமைப்பின் எந்தவிதமான வாக்குறுதிகளையும் நம்புவதற்கு மக்கள் தயாராகவும் இல்லையென்றும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினால் கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் மக்களிடம் விடைகாண முடியாத ஆயிரம் வினாக்கள் எழவே செய்கின்றன. இவ்வாறான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றதா? என்று கேள்வியெழுப்பியுள்ள அவதானிகள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்போம் எனக் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினரிடம் அவற்றை அடைவதற்கான எந்தவொரு பொறிமுறையும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக கூட்டமைப்புக்குள்ளேயே உள்முரண்பாடுகள் அண்மைக்காலமாக வலுத்து வருகின்றன என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றின் வெளிப்பாடுகளாக ஐ. நா வழங்கிய காலஅவகாசம் தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளும், கருத்துகளும் பொதுவெளிகளில் அவர்களது உள்வீட்டுப் பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன என்றும், இதன் விளைவாகவே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் கூட்டமைப்பினரால் அந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கும் நிலையும் காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் மாற்றுத் தலைமையொன்றின் தேவையே தமிழ் மக்கள் முன்னால் தற்போதுள்ள ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக மாற்றுத்தலைமையொன்றுக்கான தேவை உணரப்பட்டுள்ளதாகவும், இதற்கான சாத்தியப்பாடுகள் எதிர்காலத்தில்; அமையக் கூடியதான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுமுள்ளனர்.

Related posts: