மாற்றம் வராவிட்டால் தமிழர்களை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது – தோழர் ஸ்டாலின்

Tuesday, December 31st, 2019

.

நேற்றைய தினம் வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உருவப்படத்திற்கு சாணத்தைத் தெளித்தும் செருப்பால் அடித்தும் பலவாறான அவதூறுகளைச் சுமத்தியும் அந்த ஆர்ப்பாட்டக் காரர்கள்
நடந்துகொண்டவிதம் கண்டிக்கத்தக்கதாகும்.

அந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பின் புலத்திலிருந்து நடத்தியதாகவும், குதிரைக் கஜேந்திரன் சிலரை ஏவிவிட்டு தலைவருக்கு எதிரான அந்த அநாகரித்தை அரங்கேற்றியதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலர் என்னிடம் தெரிவித்ததுடன் அந்த சம்பவத்திற்காக தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்கள்.

1045 நாட்களாக அந்த மக்கள் வீதியில் நின்று நியாயம் கேட்டுப் போராடியிருந்தாலும் கடந்த ஆட்சியாளர்களின் பங்காளிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் அந்த மக்களுடன் கதைப்பதற்குக்கூட முன்வரவில்லை.

இந்த நிலையில் தற்போதைய ஆட்சியில் பலமற்ற நிலையில் தவிர்க்க முடியாத சூழலில் ஈபிடிபியாகிய நாம் பங்கெடுத்திருப்பதுடன் ஒரு அமைச்சுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இவ்வாறான நிலையிலும் நீண்டகாலமாக நியாயம் மறுக்கப்பட்டவர்களாக இருந்துவரும் இவர்களின் கோரிக்கைக்கு நியாயத்தைப்பெற்றுக் கொடுக்கும் உள்ளார்ந்த விருப்பத்துடன் அவர்களை சந்தித்து உரையாட தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினத்தை (31.12.2019)தீர்மானித்திருந்தார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை தலைவர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடி அவர்களின் கோரிக்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று அமைச்சரவையில் பேசு பொருளாக முன்னெடுத்தாலோ, அல்லது ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை நோக்கி நகர்த்திவிடக்கூடும் என்ற பயம் காரணமாகவும், இந்த மக்களின் பிரச்சனைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வொன்று காணப்பட்டுவிட்டால் தமது அரசியல் கபடத்தனத்தை தொடரமுடியாது என்ற அச்சம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், கஜேந்திரன்கள் தலைமையிலான குழப்பல் பேர்வழிகளும் தலைவர் அந்த மக்களை சந்திக்கவிருக்கும் ஒரு நாளுக்கு முன்னதாக அந்த மக்களை தவறாக உசுப்பேற்றி வவுனியாவில் அந்த அநாகரிகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராப்பிரச்சனைகளாக தொடர்வதையே போலித் தமிழ்த் தேசியம் பேசும் இந்த தமிழினத் துரோகிகள் விரும்புகின்றார்கள் என்பதற்கு வவுனியா சம்பவமும் ஒரு நிகழ்காலச் சான்றாகும்.

வவுனியாவில் என் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் புகைப்படத்தின் மீது அசிங்கம் செய்தவர்கள் அதை தமது தலையில் சாணியை ஊற்றி தமக்குத்தாமே தலையில் செருப்பால் அடித்துக்கொண்டதாகவே கருதவேண்டும்.

எமது தலைவர் மீதான அவதூறுகள் உண்மையாக இருந்திருந்தாலோ அல்லது எமது ஈபிடிபி கட்சி மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மை இருந்தாலோ அந்த மக்களை சந்திக்கும் அறிவிப்பை எமது தலைவர் செய்திருக்க மாட்டார் என்பதைக்கூட சிந்திக்காத மக்களாக தமிழ் மக்கள் இருப்பதாலேயே சிவமோகன்களாலும், கஜேந்திரன்களாலும் இவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்து உசுப்பேற்றவும், அநாகரீகமான சமூகமாகவும் வழி நடத்த முடிகின்றது.

முதுகில் புண் இருப்பவனே காட்டுக்குள் நுழைய அஞ்சுவான் என்பதுபோல் ஈபிடிபி மீதான குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் என்பவை உண்மையற்றதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும் என்பதை நாம் தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வந்துள்ளோம். ஆகையால் அவை தொடர்பில் எமக்கு எவ்விதமான அச்சமுமில்லை. அவற்றை நாம் பொறுட்படுத்தவுமில்லை.

இவ்வாறான அவதூறுகளையும், உயிர் அச்சுறுத்தல்களையும் கடந்தே தமிழ் மக்களுக்கான எமது சேவையை தொடர்ந்தும் செய்துவருகின்றோம்.
உண்மை ஒருநாள் வெல்லும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், எமது தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் வழிகாட்டலே சரியானதும், நடைமுறைச் சாத்தியமானதுமாகும் என்பதை காலம் ஒருநாள் உணர்த்தும் என்ற உறுதியுடனுமே ஈபிடிபியாகிய நாம் மக்கள் சேவையில் எம்மை ஈடுபடுத்தி வருகின்றோம்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஈடற்ற இழப்புக்களுக்கும், அழிவுகளுக்கும் வழிகாட்டியும், உசுப்பேற்றியும் அரசியல் பிழைப்பு நடத்திவரும் போலித் தமிழ்த் தேசியம் பேசுவோரை நிராகரித்து தீர்க்க தரசியான தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவரின் கரங்களை பலப்படுத்தி அவரது காலத்திலேயே தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நியாயமானதும், கெளரவமானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்கள் ஓரணி திரளவேண்டும்.

அவ்வாறில்லாமல் தமிழினத்தின் வலிகளையும், வடுக்களையும், துயரங்களையும் நீடிக்கச்செய்து அதில் அரசியல் இலாபமடைவோரின் உசுப்பேற்றலுக்கு எடுபட்டு தமிழ் மக்கள் தொடர்ந்தும் தவறான தீர்மானங்களையே எடுப்பார்களேயானால் தமிழ் மக்களை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாமல் போகும்

Related posts: