மார்ச் முதல் வாரத்தில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் – அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!

Friday, February 25th, 2022

பயங்கரவாத தடைச் சட்டத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டில் இடம்பெற்ற பிரான்ஸ் – இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான காலை உணவு சந்திப்பில் விருந்தினராக கலந்து கொண்டு இலங்கையின் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் பின்னணியில், இலங்கை மீது செலுத்தப்படுகின்ற நீடித்த அக்கறைக்காக பேராசிரியர் பீரிஸ் பிரான்ஸ் செனட்டர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலா, வெளிநாட்டுப் பணம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து பெற்றுக் கொள்கின்ற அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள கணிசமான குறைவு குறித்த விசேட குறிப்புடன், நாட்டின் பொருளாதாரத்தில் கொவிட் தொற்றுநோயின் பாதகமான தாக்கம் தொடர்பாக இலங்கையின் தற்போதைய சவால்கள் குறித்த விளக்கத்தையும் அவர் வழங்கினார்.

இதேவேளை நாடு தற்போது படிப்படியாக மீண்டு வருவதுடன், பொருளாதார நிறுவனங்களின் நிலையான மறுமலர்ச்சியையும் காண்பதாக அவர் விளக்கினார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் குடியரசின் செனட்டர்களுக்கு அமைச்சர் விளக்கினார்.

இதேநேரம் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி 16 இலக்குகள் பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவை போன்ற உள்நாட்டு பொறிமுறைகளின் முன்முயற்சிகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதியரசர் ஒருவரின் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் நீண்டகால நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று தமது பணியை நிறைவு செய்யவுள்ளதுடன், அவர்களது அறிக்கை முன்கூட்டியே சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 42 வருடகால பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான திருத்தங்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மார்ச் முதல் வாரத்தில் விவாதிக்கப்படவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ்   மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா செல்லவுள்ளதாகவும் அண்மைக்காலத்தில் இலங்கை மேற்கொண்ட கணிசமான நடவடிக்கைகள் தொடர்பில் பிரான்ஸ் குடியரசின் புரிதலை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: