மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர் ஒருவர் அரசதரப்பு சாட்சியாக மாற்றம்?

Tuesday, March 22nd, 2016

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பதினோரவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றையதினம் (21) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் 10 சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த பத்து மாத காலமாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி 11 ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் குற்ற தடுப்பு புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபரை ஏற்கனவே கைது செய்யப்பட்ட பத்து சந்தேக நபர்களுடன் சேர்த்து மன்றில் ஆஜர்ப்படுத்தாமல், குற்ற தடுப்பு புலனாய்வுப் பொலிஸார் வேறு தவணையில் ஆஜர்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 11 ஆவது சந்தேகநபரை குற்ற தடுப்பு புலனாய்வு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, நீதிவான் ஏம்.எம்.எம்.றியாஸ் சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பதினோராவதாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், குறித்த நபரே கொலை நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் யாழில் இருந்து கஞ்சா மற்றும் மதுபான போத்தல்களை ஊர்காவற்துறைக்கு எடுத்து சென்று சந்தேக நபர்களுக்கு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கொலை நடைபெறும் வேளை குறித்த நபர் அப்பகுதியில் நின்றதாக குறித்த நபரிடம் இருந்து தாம் பெற்ற வாக்கு மூலத்தில் தெரியவருவதாகவும், மேலும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குற்ற தடுப்பு பொலிசார் மன்றில் தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.

Related posts: