மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவு – சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு சேவைகளின் இயக்குநர் தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020

பாடசாலை மாணவர்களில் 60-70 சதவீதமானோரின் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையிலுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு சேவைகளின் இயக்குநர் பிரியந்த அத்தப்பத்து இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் –

“மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பரிசிச் சோறு, பச்சை இலை வகைகள், காய்கறிகள் மற்றும் மீன் அடங்கிய உணவை காலையில் உண்பது அவசியம்.

புதிய பழங்கள், விற்றமின் டி,சி,ஏ அடங்கிய உணவு மற்றும் காலை 7.00 மணி முதல் 10.00 மணிக்கு இடையிலான சூரிய ஒளியைப் பெறுதலும் பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர் அத்தப்பத்து மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பயறு, கௌபி, வற்றாளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளை மாணவர்கள் உட்கொள்வதும், சுத்தமான நீரைப் பருகுதலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. எனினும், மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இன்று மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: