மாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக்கி பெருமை சேர்ப்பவர்களாக உருவாகவேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, August 9th, 2018

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக கொண்டு பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாக ஒவ்வொரு மாணவரும் மாற வேண்டும்”இதுவே எமது எதிர்பார்ப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கமைய தனது வருடாந்த அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பொருளாதார நிலையில் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் துரித கல்வி வளர்ச்சிக்காக இதுவரை நாம் 75 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்துள்ளோம் இதனை ஒரு துரும்பாக பயன்படுத்தி மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நாம் இவ்வாறு உதவித் திட்டங்களை வழங்குவது மாணவர்களின் கற்றலை இலகுபடுத்துவதற்காகவே. தூர பிரதேச பாடசாலைகளுக்கு செல்வதற்கும் மாலை நேரக் கல்விக்கு செல்வதற்கும் இந்த உதவிகள் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

கடந்தகாலங்களில் எமது கட்சியாலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களதும் பல்வெறு வகையான உதவித்திட்டங்கள்  மூலம் சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பலர் நல்ல பெறுபேறுகளை பெற்றிருக்கிறார்கள்.

இந்த உதவித்திட்டங்கள் மட்டும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உயர்த்திவிடாது. மாறாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் கல்வி நிர்வாகிகள் மற்றும் மாணவர் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த வலுவூட்டலும் தான் மாணவர்களை சாதனை நோக்கி இட்டுச்செல்ல முடியும். எனவே துரித வளர்ச்சிக்கு இவ்வாறான உதவிகளை ஒரு துரும்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு தடைகளை மீறி கல்வியில் முன்னேறவேண்டும். எதிர்கொள்கின்ற பரீட்சைகளுக்கு தங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு பரீட்சைகளுக்கு துணிச்சலாக முகம் கொடுத்து சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் வலயக் கல்விப் பணிமனையின் உதவிப் பணிப்பாளர் திரு.கணேசலிங்கம் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் இணைப்பாளர் திரு.சசிதரன் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: