மாணவர்களை மிஞ்சும் ஆசிரியர்கள்! -நீதிபதி இளஞ்செழியன்!!

Friday, July 22nd, 2016

சிறைச்சாலையை நிரப்புவதில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வியை எழுப்பி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டுள்ளதுடன் ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போதைவஸ்து தொடர்பான வழக்கின் பிணைமனு மீதான விசாரணை ஒன்றின் போது நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ் குடாநாட்டில் போதை வஸ்து மற்றும் வாள்வெட்டு குற்றங்கள், கோஸ்டி மோதல்கள், தெருச் சண்டித்தனம், கொள்ளை, குழு மோதல்கள் என பலவித குற்றச்சாட்டுக்களில் பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த குற்றச் செயல்களுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனால், தற்சமயம் மாணவர்கள் குற்றங்கள் புரிவது குறைவடைந்து காணப்படுகின்றது.எனினும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது குறித்து தொடர்ச்சியாகக் முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கின்றார்கள். மாணவர்களைத் தாக்குகின்றார்கள். மாணவிகள் மீது பாலியல் குற்றம் புரிகின்றார்கள் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாடசாலைகள், பாடசாலை வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் என்பன குற்றச் செயல் புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசமல்ல.

குற்றச் செயலைச் செய்த எந்தவொரு நபரும், தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமையான போக்கையே எடுக்கும். சிறுவர்கள், மாணவ மாணவிகள் மீது குற்றம் புரியும் சம்பவங்களை, சமாதானமாக இணங்கி வைக்க முடியாது. அக்குற்றச் செயல்கள் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

மாணவிகள் மீது பாலியல்வதை புரியும் ஆசிரியர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என தண்டனச் சட்டக்கோவை மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கின்றது. மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தாக்குதல் நடத்துவதை சிறுவர் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பாரதூரமான குற்றமாகக் கருதுகின்றது.

இந்தக் குற்றத்திற்கு மேல் நீதிமன்றத்தினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இதே குற்றத்தை சிறுவர்களைக் கொடுமைப் படுத்திய குற்றமாக தண்டனைச் சட்டக் கோவை சுட்டிக்காட்டி, சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்கின்றது.

மிக முக்கியமாக ஆசிரியர் மாணவனைத் தாக்குவது, சிறுவர்களைக் கொடுமைப்படுத்தும் குற்றம் என குறிப்பிட்டு, அது மேல் நீதிமன்றத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என, சித்திரவதைச் சட்டமும் பரிந்துரை செய்கின்றது, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆம் பிரிவு மாணவனை ஆசிரியர் தாக்குவது சித்திரவதை என்றும், அது ஓர் அடிப்படை உரிமை மீறல் எனவும் குறிப்பிடுகின்றது.

மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என, அரசியலமைப்புச் சட்டத்தின் 126ஆம் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆசிரியர் மாணவனுக்கு அடிப்பது என்பது, ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என முன்னொரு காலத்தில் கருதப்பட்டது. அது மாணவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை என்ற அடிப்படையில் அன்று அதனை சமூகம் அங்கீகரித்திருந்தது. அது ஒரு குற்றமாக அப்போது கருதப்படவில்லை.ஆனால் இன்று ஆசிரியர் மாணவனுக்கு அடிப்பது என்பது ஒரு பாரதூரமான குற்றச் செயல் என நியதிச் சட்டங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில் மாணவர்களை அடிக்கின்ற ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை வழங்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு பக்கத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக ஆசிரியர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆசிரியர் மீது மாணவன் பொய்க்குற்றச் சாட்டு ஒன்றை முன்வைத்ததாக நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால், பொய்க் குற்றம் சாட்டி, அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்த குற்றத்திற்காக அந்த மாணவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டம் பரிந்துரை செய்கின்றது. ஆசிரியர்கள் மட்டுமல்ல. மாணவர்களும் ஆசிரியர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி குற்றச் செயல் புரிய முடியாது. அதற்கு சட்டம் இடமளிக்கவில்லை. யாழ்ப்பாண சமூகத்தில் மாணவனுக்கும் ஆசானுக்கும் இடையில் குரு சிஷ்யன் என்ற ரீதியில் இன்றும் 95 வீதம் உறவு திறம்பட காணப்படுகின்றது.

ஆனால் 5 வீதமான ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் செயற்பாடுகளே யாழ் குடாநாட்டின் கல்விச் சமூகத்தை வருத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் சட்டத்தைப் பற்றி தெரியாது என நீதிமன்றில் விவாதம் செய்ய முடியாது. எனவே ஆசிரியர்கள் மாணவிகளைத் தொடவே கூடாது. ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தவே கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். அதேவேளை, ஆசிரியர்களை சிரம் தாழ்த்தி வணங்கும் குருவாக மாணவர்கள் அனைவரும் மதிக்க வேண்டும்.

பாடசாலைகளில் அல்லது பாடசாலை வளாகத்தில் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், உடனடியாக அவைபற்றி பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும்.ஆசிரியர்கள், அதிபர்களோ அல்லது வலயக் கல்வி அலுவலகம் உட்பட கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளோ குற்றச் செயல்களை மூடி மறைக்கக் கூடாது. பாடசாலையின் கௌவரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போர்வையில் குற்றச் செயலை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும் என்பதை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, மாணவிகள் மீது பாலியல் வதை புரிந்தது என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமையான போக்கையே எடுக்கும். யாழ்ப்பாண சிறை நிரப்புப் போராட்டத்தில் மாணவர்களைப் பின்தள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் இருக்கின்ற வெட்கக்கேடான செயற்பாடு தற்சமயம் அரங்கேறுகின்றது. சட்டத்தைக் கையில் எடுத்து வன்செயலில் ஈடுபடும் எந்த நபரும், சட்டவாட்சிக்கு எதிரானவர்கள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: