மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகம் – O/L பரீட்சையில் மாற்றமில்லை திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் அறிவிப்பு!

Thursday, March 24th, 2022

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2338.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அச்சிடப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் அடுத்த தவணை ஆரம்பமாவதற்கு முன்பே அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்..

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த கடிதம் செல்லுபடியாகும் என அவர் கூறினார்.

அடையாளத்தை உறுதிப்படுத்தும் கடிதம் விநியோகிக்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: