மாணவர்களுக்கு குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, May 6th, 2021

க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியை திருத்தம் செய்து அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலத்தைக் குறைப்பதன் மூலம் குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள் செய்திக்குறிப்பில்  –

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் க.பொ.த உயர் தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் இடையே எடுக்கும் காலப்பகுதி, மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலம் அதிகரிப்பதால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்வதிலும், பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களுடைய வயது முறையே 19-20 மற்றும் 25-26 வயதாகின்றது என்பது தெரியவந்துள்ளது.

இந்த இப்பரீட்சை முறையில் இருக்கின்ற கட்டமைப்பு ரீதியான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக ரீதியான தாமதங்களால் உயர் கல்வியை துரிதமாகப் பூர்த்தி செய்து தொழில் சந்தைக்குப் பிரவேசிப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேரிட்டுள்ளது.அத்துடன் இந்நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீமை பயக்குகின்றதென்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இந்நிலைமையை தடுப்பதற்காக கீழ்க்காணும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் 10 மற்றும் 11 ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் 09 மாத காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைப்பதாகவும், க.பொ.த சாதாரண தரம் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், க.பொ.த உயர் தரம் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளும் 3 மாதத்திற்குள் வெளியிடப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கும் அதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரிப்பதுடன் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய வெட்டுப்புள்ளி வழங்குவதன் மூலம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுடன் குறித்த பொறிமுறையை 2020 தொடக்கம் நடைமுறைப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவர்கள், பீடங்கள் மற்றும் பணியாளர்கள் குழாம் பரிமாற்ற வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒத்துழைப்பு ஆய்வுகள், கற்பித்தல் மற்றும் கலாசார வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் ஆய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் –

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பு நிறுவனம்ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: