மாகாண சபைகளின் பதவிக் காலங்களை நாடாளுமன்ற அனுமதியின்றி நீடிக்க முடியாது  – பவ்ரல் !

Tuesday, May 23rd, 2017

மாகாண சபைகளின் பதவிக் காலத்தை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையின்றி நீடிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறானதொரு விசேட சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தல்களை கண்காணிக்கும் (பவ்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் ரோகண ஹெட்டிராய்ச்சி தெரிவித்தவை பின்வருமாறு

மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதற்கான பதவிக் காலத்தை மேலும் நீடிக்கும் வகையிலான விசேட சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின் தற்போதைய சூழலில் அந்தச் சட்டமூலம் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும். இந்நிலையில் மாகாண சபைகளின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான விசேட சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படுமாயினும், அதன் பின்னர் அந்த விசேட சட்ட மூலம் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனைகள் முன்வைக்கப்படுவதற்காக உயர் நீதிமன்றத்தில் அந்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும்.

உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்தச் சட்ட மூலத்துக்கான அங்கீகாரத்தை பெறும் பொருட்டு அதனை மக்கள் கருத்தறிய உயர் நீதிமன்றத்தால் முன்வைக்கப்படும்.  அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு நாட்டுப் பிரஜைகள், சிவில் அமைப்பினர், மற்றும் புத்தி ஜீவிகள் இதற்கு தமது எதிர்ப்பையே நிச்சயம் வெளிப்படுத்துவர். மக்களது ஆதரவின்றி அந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படுவது சாத்தியமற்ற விடயமாகும் என்றார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இது வரையில் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதால் நல்லாட்சி அரசின் மீது கூட்டு எதிரணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் தேர்தல்கள் தொடர்ந்தும் காலதாமதப் படுத்தப்படு கின்றமையால் மக்களின் அடிப்படை உரிமைகளிலும் பாதிப்பேற்பட்டுள்ளதாகவும் சிவில் அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: