மாகாணத்தின் மீது அக்கறைகொண்ட தலைவர்களே மக்களுக்குத் தேவை – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, April 24th, 2021

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் அதற்கு நந்திபோன்று குறுக்கே வடக்கின் ஆளுநர் இருப்பதாகவும் குற்றம்சாட்டிவந்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், தமது வடக்கு மாகாணத்தின் ஆட்சியில் மூக்குக்கண்ணாடி கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு எண்ணற்ற நிதிமோசடியில் ஈடுபட்டதை தவிர வேறெதனை செய்திருந்தனர் என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற பிரதே சமக்களுடனான சந்திப்பின்போது கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது மாகாணசபை முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு யோசனை முன் வைத்ததுள்ள நிலையில், வடக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையில் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுடன் அறுதிப் பெரும்பான்மை ஆசனத்துடன் அதிகாரத்தில் இருந்த இலங்கைத் தமிழ் அரசுக்கட்சின் ஆதிக்கத்தின் கீழிக்கும் கூட்டமைப்பு வடக்கு மாகாண மக்களுக்காக எதனைச் சாதித்திருக்கிறது என்பதைக் கூறமுடியுமா?

2013 இல் மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடனேயே மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் போதே கூட்டமைப்புக்குள் குழப்பம் உருவெடுத்திருந்தது.தமிழர் அரசு அமைந்தது என பெருமெடுப்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனால் மக்களுக்கு பயனேதும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானது.

போரில் கொல்லப்பட்டவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு, புலிகள் உறுப்பினர்களாக இருந்து யுத்தத்தில் உயிரழந்தவர்களுக்கு ஓய்வூதியம் என பல்வேறு கவர்ச்சிக் கோசங்கள் பெருமையாக சொல்லப்பட்டன. எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மாகாணத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசுதடையாக இருப்பதாக சாட்டுக்களை கூற ஆரம்பித்தது கூட்டமைப்பு. முதலில் வடக்குமாகாண ஆளுநர் மாகாணத்தின் அபிவிருத்திக்கு நந்திபோல் குடுக்கே இருப்பதாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.

பின்னர் தலைமைச் செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி தடையாக இருப்பதாகக் கூறி நல்லாட்சி என்ற சொல்லாட்சி அரசின் ஆசீர்வாதத்துடன் அவரை இடமாற்றம் செய்தார்கள். மாகாண அரசு அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

இறுதியில் வடக்கு மாகாண மந்திரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை அம்பலத்திற்கு வந்தது. பின்னர் நான்கு மந்திரிகள் மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் மூக்குக்கண்ணாடி கொள்வனவில் வடக்கு மாகாணசுகாதார அமைச்சு நிதிமோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

யுத்தத்தின் வலியினால் பாதிப்பைச் சந்தித்தமக்கள் மாகாண அரசு எங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கைக் கனவுகலைந்தது. இளைஞர்கள் யுவதிகளின் வேலைவாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு சிதைந்தது. எதற்கும் மாகாணசபையின் வாயில்களில் போராட்டங்களை நடத்தி களைத்து கலைந்து செல்ல வேண்டியவர்களாயினர்.

இறுதியில் மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஐந்து வருடத்தை வீணடித்துவிட்டோம் என்ற செய்தியை வடமாகாணமக்களுக்கு அறிவித்தார். மாகாணத்தின் அமைச்சுக்கள் திணைக்களங்களில் 30.06.2018 வரையான கணக்கீட்டின் அடிப்படையில் சுமார் 7,000 வெற்றிடங்கள் இருந்தமை தெரியவந்தது.

இப்போது மீண்டும் அதே பல்லவியைப் பாட கூட்டமைப்பு முனைந்துள்ளது. எனவே புரட்சிகரத் திட்டங்களும் புயல் வேகமும் மாகாணத்தின் மீது அக்கறை கொண்ட தலைவர்களுமே மக்களுக்குத் தேவை. அத்திசை நோக்கிப் பயணித்திட மக்கள் துணைநிற்க வேண்டும் எனவும் அவர்மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: