மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது கைவிரல் அடையாளம்!

Thursday, July 27th, 2023

சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சில நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளின் அலுவலக வருகை மற்றும் வெளியேறும் தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த அதிகாரிகள் கைவிரல் அடையாளத்திற்கான இயந்திரத்தினை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் நிர்வாகப்பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சீ கருணாரத்னவின் கையொப்பத்துடன் இதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நிதிப்பிரிவு அதிகாரிகளுக்கு இந்த அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவையில் இதுவரை காலம் இவ்வாறான கைவிரல் அடையாளம் பயன்படுத்துவது காணப்படவில்லை.

வருகை நேரம் மற்றும் வெளியேறும் நேரம் தொடர்பிலான தரவுகளுக்கு கைவிரல் அடையாள இயந்திர பயன்பாட்டு முறையினை அறிமுகப்படுத்துவதானது வைத்தியர்களின் சேவை யாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சில நிறைவேற்றுப்பிரிவு அதிகாரிகளுக்கு கைவிரல் அடையாள இயந்திரத்தினை பயன்பாட்டில் கொண்டுவருது நடைமுறைக்கு சாத்தியமானது இல்லை என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: