மரண தண்டனை தொடர்பில் வத்திக்கானின் அறிவிப்பு!

Friday, August 3rd, 2018

எந்தச் சூழலிலும் மரண தண்டனை வழங்குவது தவறு என்று, வத்திக்கானில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரண தண்டனை குறித்த தனது முந்தைய நிலைப்பாடான மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கருத்தை வத்திக்கான் இவ்வாறு  மாற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மரண தண்டனை என்பது ஒரு தனி மனிதரின் வரம்பு மீறக்கூடாத விவகாரங்கள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் என்று வத்திக்கான் கூறியுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க பாடுபடுவோம் என்றும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போப் பிரான்சிஸின் மரண தண்டனை தொடர்பான கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய போதனைகளில் ஒன்றான மறைக்கல்வி திருத்தப்பட்டுள்ளது.

“சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை கொலை செய்வது, அவர் குற்றத்தை நினைத்து வருந்துவதையும், அவர் திருந்துவதற்கான சாத்தியம் நிறைந்த வாய்ப்புகளையும் தடுக்கும்” என வத்திக்கான் திருச்சபையின் செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கத்தோலிக்க திருச்சபை முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில், போதைப்பொருள் வியாபாத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவது குறித்து பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: