மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா புதிய தீர்மானம்!
Thursday, February 16th, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், எதிர்வரும் மார்ச் மாத அமர்வில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றிற்கு பிரித்தானியா அனுசரணை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய தீர்மானம் ஒன்றை பிரித்தானியா கொண்டுவரவுள்ளதாக மனித உரிமை பேரவையின் 34 ஆம் அமர்விற்கான ஏற்பா ட்டுக்குழுக் கூட்டத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த அமர்வு தொடர்பான அமைப்புக்கள் ரீதியான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் 34 ஆவது ஜெனீவா அமர்வில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானங்கள் மற்றும் குழு அல்லது பக்கநிகழ்வுகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள முன்னெடுப்புக்களை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதிநிதிகளுக்கு மனித உரிமை பேரவையின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், 34 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மனமொன்றை கொண்டுவரவுள்ளதாக இந்தக் கூட்டத்தின் போது பிரித்தானியா அறிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, இலங்கைக்கு சார்ப்பானதாக இருக்குமா அல்லது எதிரானதாக இருக்குமா என்பது தொடர்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
குறித்த தீர்மானத்தின் பிரகாரம் யுத்தத்தின் போதான பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு மேலும் காலம்கொடுப்பதற்கான தீர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில், இலங்கை தொடர்பில் மார்ச் 22 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


