மந்தகதியில் யாழ் மாவட்ட பொலிசாரின் செயற்பாடுகள் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டு – பொலிசார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் – யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் கோரிக்கை!

Thursday, October 26th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் பொலிசாரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்ப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளார்கள்.

இதிலிருந்து எமக்கு ஒன்று புரிகின்றது. பொலிசாரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளது எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாதுவிட்டால் பொலிஸ் அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள் எனவும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது. அதில் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் முதல்முதலாக நாடுவது போலிஸ் நிலையத்தினைத்தான். மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் பொலிஸ் கடமையினை செய்கின்றோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மந்தகதியில் செயல்படுகிறார்கள் என தெரிவித்த போது அதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் பொலிசார் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் அதாவது ஒரு திருடனை திருட்டு சம்பந்தமாக கைது செய்ய முயன்றால் அவன் ஒழித்திருப்பான் அல்லது வேறு எங்கேயாவது மறைத்திருப்பான். இப்படி பல சம்பவங்கள் உள்ளன ஆனால் உயிரை உச்சம் என மதித்து தான் இந்த போலீஸ் கடமையை செய்படுத்துகிறோம்

இவ்வாறானநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல. ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள். 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம். ஆகவே பொலிசார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுதேசி வெட்டுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: