மடுத்திருவிழாவுக்கு இம்முறை 3 இலட்சம் பேர் வருகைதருவர் என எதிர்பார்ப்பு!
Saturday, June 9th, 2018
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மடுப்பகுதிக்கு எதிர்வரும் ஆடிமாத மடுத் திருவிழாவுக்கு 3 இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
ஆடி மாத மடுத்திருப்பதி விழாவை முன்னிட்டு நேற்று மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் எஸ்.குணபாலன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே குருமுதல்வர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
இவ் ஆண்டும் வழமைபோல 3 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். இம் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழாவுடன் நிறைவு பெறவிருக்கின்றது. இந்த பத்து தினங்களும் பலர் மடுத் திருப்பதிக்கு வந்து இங்கு முகாமிட்டு நவநாள்கள் மற்றும் திருவிழாவிலும் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட செயலகமும் மடு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்கள் கடந்த காலத்தில் ஏராளமான உதவிகளைச் செய்திருக்கின்றீர்கள். இவற்றை நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
இந்த வருடமும் மடுத்திருப்பதிக்கு வருகைதர இருக்கும் இலட்சக் கணக்கான யாத்திரிகர்களுக்கு உதவிகள் செய்ய முடியும் என எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றார்.
இதில் போக்குவரத்து, பாதுகாப்பு, ரயில் சிறப்பு சேவை, சுகாதாரம், மற்றும் மின்சாரம், நீர், உணவு போன்ற முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார், மடுத் திருப்பதி பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தனா உள்ளிட்ட பல திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|
|


