மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் – ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!

Monday, August 27th, 2018

தமிழ் பிரதேசங்களில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களின் நிலங்களில் அம் மக்களே வாழவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) தெரிவித்துள்ளார்.

மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்தினூடாக தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் பறிபோகவுள்ளமையை கண்டித்து முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு கண்டணப் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக எமது மக்களில் பலர் தங்களது சொந்த காணிகளைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு கைவிடப்பட்ட காணிகளில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர், பல தரப்பினரும் வந்து அக் காணிகளைத் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளும் முயற்சிகளி ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களை குடியேற்றங்கள் என்றும் தொல்லியல் ஆய்வுக்கு என்றும் அரசுக்கு ஒதுக்கிய காணி என்றும் கபளீகரம் செய்யப்படு வருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தொன்றாகும்.

கடந்த காலங்களில் அரசியல் தீர்வுக்காகவும் தேசிய நல்லிணக்கத்திற்காகவும் கிடைத்த வாய்ப்புக்களை கடந்த காலத்தில் தேசியம் பேசிய தமிழ் தலைமைகளால் தவறவிடப்பட்டதன் வெளிப்பாடுகள் தான் இன்று எமது மக்கள் ஒவ்வொரு அடிப்படை தேவைக்கும் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு காரணம்.

அந்தவகையில் எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமானால்   தற்போது எழுந்துள்ள இவ்வாறான பிரச்சினைகள் ஒவ்வொன்றும் இருதரப்பினருடனும் பேசி சுமகமான வகையில் தீர்வுகள் காணப்படவேண்டும் அதற்காக குறித்த மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குடியேற்றம் தொடர்பில் அவதானஞ் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என தெரிவித்த அவர் எமது மக்களின் நிலங்களை, வாழ்வாதாரங்களை அபகரிக்கும் வகையிலான குடியேற்றங்கள் உருவாகுவதை எம்மால் அனுமதிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: