மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது – மஹிந்த தேசப்பிரிய!

Thursday, November 10th, 2016

உள்ளூராட்சி தேர்தல்கள் பிற்போடப்பட்டுவருவதால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் தெரிவித்த அவர், உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாமையால் மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி குறிப்பிட்ட அவர்: எவ்வாறாயினும் இந்த வருடத்தில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இடம்பெறமாட்டாது என்றும் இந்த தாமதம் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வருட இறுதியிலேயே எல்லை மீள் நிர்ணய விடயங்கள் முழுமையாக நிறைவு பெறும் என குறிப்பிட்ட அவர் அடுத்த ஏப்ரலில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இடம்பெறலாம். என்றும் அத்துடன் அடுத்த வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கிழக்கில் ஏறாவூர் நகர சபை, காத்தான்குடி நகர சபை ஆகியவற்றுக்கு கடந்த 2008 மார்ச்சுக்குப் பின்னர் தேர்தல் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றின் ஆட்சிக் காலம் 2013 மார்ச்சில் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாமை குறித்தும் அவர் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தினார். தேர்தல் காலதாமதாவதை வைத்திக்கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் ஆணைக் குழுவை விமர்சிக்கக்கூடாது என அரசியல் வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கேட்டுக்கொண்ட அவர் அரசியமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுமே தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் அதற்கு மேல் பாராளுமன்றமும் நீதிமன்றமும் தீர்மானம் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று தேர்தல் செயலகத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

எம். எம். மொகமட் உட்பட மேலதிக ஆணையாளர்கள், ஆணைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு தலைவர்: உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நினைத்தமட்டில் இது தொடர்பில் தீர்மானமெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடையாது, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே உரிய திகதியைத் தெரிவிக்க வேண்டும். அல்லது பாராளுமன்றம் அல்லது நீதித்துறைக்கே அந்த அதிகாரமுள்ளது.

எல்லை நிர்ணய குழு அதன் அறிக்கையை தயாரித்துள்ளபோதும் வரைபடங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் முடிவடையவில்லை. எதிர்வரும் டிசம்பரிலேயே அது நிறைவுபெறும் அதற்கிணங்க அடுத்த ஏப்ரலிலேயே உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பதே இப்போதைய நிலை.

தேர்தல் செயலகம் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளது. அதற்காக 300 கோடி ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையும் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

colimages195007149_4999375_09112016_kll_cmy

Related posts:

வடமாகாண கல்வி அமைச்சின் வினைத்திறனின்மையால் ஒரு பாடசாலையில் இரண்டு அதிபர்கள் -  ஈ.பி.டி.பி.யின் வடக்...
பொது மக்களுக்கு அதிகளவில் வரி நிவாரணம் வழங்கியது இந்த அரசாங்கமே - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரை மாற்றம் இல்லாது நடைமுறையிலிருக்கும் - அமைச்ச...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அடாவடி: அதிருப்தியில் நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம...
நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் உயர்தர பரீட்சை ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...