மக்களிடையே பிரச்சினைகள் இல்லை: பிரிவுக்கு காரணம் அரசியல்வாதிகளே – வடக்கின் ஆளுனர்!

Saturday, November 18th, 2017

எமது நாட்டில் காணப்படும் பிரிவுக்கு அரசியல்வாதிகளே காரணம். அவ்வாறானவர்கள் தென்னிலங்கையிலும் இருக்கின்றார்கள். இங்கேயும் இருக்கின்றார்கள். ஆனால் மக்களுக்கிடையே எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய பரிசளிப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

அரசியல்வாதிகள் தலைவர்களாக இருப்பதற்கு முரண்பாடுகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தேவையாக இருப்பது அபிவிருத்தியே. நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த மக்களுக்கு அபிவிருத்தியைக் கொண்டுவர வேண்டும்.

நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருப்போமானால் ஒரு தேசம் ஒரு தலைவன் இருப்பான். தூண்டுதல்கள் காரணமாக மக்களாகிய நாம் பல துண்டுகளாக பிரிந்து இருந்தால் பல தலைவர்கள் இருப்பார்கள். அதையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

போர்க்காலத்தில் இங்கேயுள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றார்கள். பிரான்ஸ், சுவிஸ்லாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளில் வசிக்கின்றார்கள். அங்கிருந்து இங்கே பணம் அனுப்புகின்றார்கள். பத்து வருடங்களுக்கு இங்குள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவார்கள். பின்னர் அவர்களின் பிள்ளைகள் இங்கே பணம் அனுப்பமாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் தாய்நாடு இலங்கை என்று தெரியாது. உறவினர்களை, நண்பர்களைத் தெரியாது.

அப்படியொரு நிலை இங்கே உருவாகும். நாம் இந்த அழகிய நாட்டிலே ஒன்றாக இருக்கவேண்டும். நலமாக வாழ வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். இங்கு மாணவர்களின் விருதுகளைப் பார்த்த பின்னர் நான் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். சிறிய பாடசாலையான போதும் பெரிதாகச் சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள். எங்களாலும் முடியும் என்பதைக் காட்டியிருக்கின்றீர்கள். அதற்கு உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் பாராட்டுகின்றேன் என்றார்.

Related posts: