போரை விடவும் தற்போது விபத்தால் அதிக இறப்புக்கள் – வடக்கு ஆளுநர் !

Thursday, February 22nd, 2018

போர் நடந்தபோது உயிரிழந்தவர்களை விடவும் தற்போது வீதி விபத்துக்களால் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் எற்பாட்டில் மாகாணப் பிரதிப் பிரதம செயலர் அலுவலகத்தின் வழிகாட்டலில் (ஆளணியும் பயிற்சியும்) போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பான திணைக்கள சாரதிகள் மற்றும் சாரதி பயிற்சி பாடசாலைகளின் அலுவலகர்களுக்கான கருத்தரங்கு யாழ்ப்பாண பொது நூலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

அதிவேகமான வாழ்க்கையிலே வேகமாக பயணிக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஆதைப்போன்று வாகனத்தையும் நாம் வேகமாக செலுத்துகின்றோம். நோயால் வயது வந்தவர்கள் இறப்பது இயற்கை. அதி வேக வாகனம் செலுத்துவதால் இளைஞர்கள், குழந்தைகள் இறப்பதுக்கு நாமே காரணமாகின்றோம். ஒரு விபத்தின் போது குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்?. அன்று போர் காலத்தில் இறந்தனர். அதை விட இப்போது வீதி விபத்தால் அநேகர் இறக்கின்றனர். அதற்கு காரணம் எமது வேகம். வாழ்க்கையின் வேகத்துக்கு நாம் ஓட வேண்டும். ஆனால் வாகனத்தை வேகமாக ஓடக் கூடாது. என்றார்.

இதனிடையே எமது நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற வாகன விபத்துகள் குறித்து மிக முக்கிய அவதானத்தைச் செலுத்த வேண்டிடும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் க்ட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான நாடாளுமன்ற  விவாதத்தில் நேற்றுமுன்தினம்  சுட்டிக்காட்டியிருந்ததுடன் அதற்கு துறைசார் தரப்பினர் உரிய பரிகாரங்கள் காணவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: