போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் பிரிவினைவாத சக்திகளால் இலங்கைக்கு பேரபாயம் – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவிப்பு!

Sunday, December 12th, 2021

போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான சக்திகள் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள தாமரைத்தடாக மகிந்த ராஜபக்ச அரங்கில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் 15 ஆவது கற்கை நெறிக்கான பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கமல் குணரட்ண, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக எழும் பேரபாயங்களை தடுப்பதே தமது பாரிய பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நட்பு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதானது பேரபாயங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய காரணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள புலிகளுக்கு ஆதரவான சக்திகள் மற்றும் அதன் மறைமுக ஆதரவான உள்ளூர் சக்திகள் பிரிவினைவாத சித்தாந்தத்தை கொண்டிருப்பதனால் அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறிய அவர், அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: