போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022

போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்

இதன்படி, பெரும்பாலும் இன்றையதினத்திற்கு அவசியமான எண்ணெய் மின்சார சபைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, போதியளவு உலை எண்ணெய்யும் டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே செயலிழந்திருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்தடைந்ததாக இலங்கை மின்சார சபை நேற்று (01) அறிவித்திருந்தது.

கடந்த டிசம்பர் 3 ஆம் திகதிமுதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி நேற்றையதினம் மறுபடியும் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: