பொறுப்பற்ற நிலைமையே பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம்!

Wednesday, March 23rd, 2016

தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிரானதும் சிறுவர்களுக்கு எதிரானதுமான வன்முறைகள் அதிகரிக்க காரணம் பிள்ளைகள் மீதான பெற்றோரின் கவனயீனமாகும்’ என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் வசந்திய அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

பெண்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

‘தாய்மார்களே, பிள்ளைகள் தொடர்பான கவனிப்பை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளது நடத்தைகள் அவர்களிடம் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பாக அவதானித்து அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும். மேலும், சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பெண்களும் ஒரு காரணமே.

பெண்கள் தமக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பிழைகளை தட்டிக் கேட்க கூடியவர்களாக  இருக்க வேண்டும்.  தனது மனச்சாட்சிக்கு நான் துரோகமிழைக்கவில்லை, பிழையாக நடக்கவில்லை, நான் சரியாகவே நடக்கிறேன் என்ற துணிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும்.

யாழ். பல்கலைகழகத்தில் கூட சில பேராசிரியர்களை நாம் இடை நிறுத்தியுள்ளோம். ஏனெனில் அவர்கள் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனால், இச் செயற்பாடு தொடர்பாக ஆரம்பத்திலேயே பெண்கள் தெரிவித்திருந்தால் இப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

எனவே, பெண்கள் துணிச்சல் மிக்கவராக தமக்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அத்துடன், இவ்வாறான விடயங்களை பெண்ணியவாதிகளும் வலியுறுத்த வேண்டும். பெண்களின் கையிலேயே எதிர்கால சமூதாயம் உள்ளது. எனவே நாம் மற்றவரை குறை கூறுவதை விடுத்து நாம் சரியான வழியில் நடப்பதுடன் பெண்கள் தமக்கெதிரான நடவடிக்கைகளுக்கு துணிந்து முகம் கொடுக்க கூடியவர்களாக மாற வேண்டும் அப்போது தான் சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும்’ என அவர் மேலும் கூறினார்.

Related posts: