பொருளாதாரதத்தை மறுசீரமைக்க சட்டமூலம் – 3 வருடங்களில் இளைஞருக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 8th, 2024

பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் மேற்படி இணக்கப்பாட்டுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சரியான திட்டத்துடன் செயற்பட்டால் மாத்திரமே சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வேளையில் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையிலிருந்து மீண்டு வர 05 – 06 வருடங்கள் ஆகலாம் என்று பலரும் கூறினர்.

எதிர்காலம் இருக்காது என்று அஞ்சி பலரும் நாட்டை விட்டுச் சென்றனர். இருப்பினும் இரு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது.

எந்த அளவு கஷ்டங்கள் இருந்தாலும், பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், சிறிது காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி வலுவான வாழ்க்கைச் சூழலை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காகவே வற் வரி அதிகரிக்கப்பட்டது. அதனால் மக்கள் திட்டித் தீர்த்தனர். ஆனாலும் இரு வருடங்கள் முடியும் முன்பாகவே ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல முடிந்தது.

அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் விவசாயத்தில் நல்ல அறுவடை கிடைத்தது. நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்தனர். நாட்டு மக்களின் முயற்சியினாலும், அரசாங்கத்தின் சரியான வேலைத்திட்டத்தின் பயனாகவும் முன்னோக்கிச் செல்ல முடிந்திருக்கிறது. நாட்டின் உண்மை நிலையை மறந்து விட்டு வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

நாட்டில் உண்மையைான அரசியல் நிலைமை தொடர்பில் பேச முடியாதிருப்பதாலும், அதற்கு தீர்வு தேட முடியாத நிலை காணப்படுவதாலும் இளையோர் அரசியலில் இருந்து விலகியுள்ளனர். அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். அதனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டாது. ஒரே இடத்தில் இருந்தால் நாம் மீண்டும் வீழ்ந்துவிடுவோம். அதனால் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. பலரும் போலி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் எம்மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்டு போலி வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: