பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள்!

Friday, January 13th, 2023

பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அரசியலமைப்புக்கு எதிராகவும், சட்டத்திற்கு முரணான வகையிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தியமை தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹண ஹெட்டியாராச்சி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘தேர்தல் ஆணைக்குழுவுக்கு, அரசியலமைப்பு மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) – 5.(1)(2) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு ஏற்புடைய சட்டத்தின் உறுப்புரைக்கமைய தெரிவத்தாட்சி அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் நியமனம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 104 – 4(ஆ) உறுப்புரைக்கமைய, அனைத்து அரச அலுவலர், எழுத்திலான சட்டத்திலான அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட தொழில் முயற்சிகள் மற்றும் பகிரங்க கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச அலுவலர்களும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கமைய செயலாற்ற வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையை புறக்கணித்தல், அதற்கமைவான பணிப்புக்களின் கீழ் செயலாற்றாமைக்கான குற்றத்தீர்ப்புக்கு மூன்று வருட மறியற்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய்களுக்குக் குறையாத குற்றப்பணம் அல்லது குற்றப்பணமும் மறியற்தண்டனையும் வழங்கக்கூடிய குற்றமாக அரசியலமைப்பின் 104எஎ.1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான சூழலில் நிர்வாக சேவையில் சிரேஷ்ட அலுவலரான பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத் தொகையை பொறுப்பேற்க வேண்டாமென அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதமூலம் அறிவித்தமை, அவர் நன்றாக அறிந்து கொண்டே அரசியலமைப்பின் 104 ஆவது உறுப்புரையை மீறியுள்ளமை தெரிய வருகின்றது.

அரச நிர்வாக செயன்முறையில் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிர்வாகிகளுக்கும் தலைமைத்துவம் வகிக்கின்ற பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இவ்வாறான தவறை மேற்கொள்வதை கருத்திலெடுக்காது விடமுடியாது.

குறிப்பாக மக்களுடைய உரிமையான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் நிர்வாக அதிகாரியொருவர் இவ்வாறான கடிதத்தை வெளியிடுவது ஒட்டுமொத்த அரச சேவையின் மதிப்பைக் குன்றச் செய்வதுடன், எதிர்காலத்தில் இதுவொரு தவறான முன்னுதாரணமாகவும் அமையும்.

தமது உயர் அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்குவதாயின் அல்லது அரசியலமைப்புக்கு எதிராக ஆலோசனை வழங்கும் போது நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியாக அவர் அதற்கு எதிராக செயற்படல் வேண்டும்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து அங்கத்தவர்களிடமும், தங்களுடைய பணிப்புக்களுக்கு எதிராக செயற்படுமாறு கூறி, நியாயமான காரணங்களை முன்வைக்காமல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இவ்வாறான ஆலோசனை வழங்கிய குறித்த அமைச்சின் செயலாளர் தொடர்பாக அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

எமது இவ்வேண்டுகோள் தனிப்பட்ட பிரத்தியேகமான விடயமல்ல என்பதுடன், எமது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காகவும்,

அரச ஊழியர்களுக்கு சுயாதீனமாக செயலாற்றுவதற்குமான சூழலை உருவாக்குவதற்காகவே என்பதை தயவுகூர்ந்து குறிப்பிட்டுக் கூறுவதுடன், இவ்விடயம் தொடர்பாக தாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டின் ஜனநாயகத்தின் திருப்புமுனையாக அமையும் என்பதையும் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கமோ அல்லது தேவையோ அரசாங்கத்திற்கு இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: