பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Thursday, July 5th, 2018

புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்கள் எந்தவகையிலும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. இவ்விடயத்தினைக் கவனத்தில் கொண்டு மக்களின் பாவனைக்கு ஏற்றவகையில் பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலிகாமம் பிரதேச சபையின் கூட்டத்தொடரில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் அமைப்பு முறை தவறாக உள்ளது என மக்கள் விசனம் தெரிவித்து வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அராலி பாலத்தடி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி சந்தியில் ஏற்கனவே சிமெந்தினால் அமைக்கப்பட்டிருந்த தரிப்பிடங்களை அகற்றியதுடன் தற்போது அவ்விடங்களில் புதிதாக தகரத்தினால் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வெயில், மழை காலங்களில் மக்கள் ஒதுங்குவதற்கான எந்தவித வசதியும் இல்லாமல் பொருத்தமற்ற முறையில் தரிப்பிடம் காணப்படுகின்றது. ஆகவே இவ்விடயத்தினைக் கவனத்தில் கொண்டு RDA யினுடைய அனுமதியைப் பெற்று ஆரம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த பேருந்து தரிப்பிடத்தினைப் போன்று உரிய முறையில் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அராலி கிழக்கு, அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள மயானத்திற்குள் செல்லும் வீதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுவதால் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் மக்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் வலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குள் உட்பட்டிருக்கும் அனைத்து மயானங்களும் இவ்வாறான குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.

எனவே அவற்றையும் கவனத்தில்கொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நிதியின் மூலமோ அல்லது சபை நிதியின் மூலமாகவோ இப்பிரச்சினைகளைத் தீர்வு காணவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: