பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு – புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் – அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022

கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

பேருந்து உரிமையாளர் சங்கத்துடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் முடியுமானவரை குறைந்தளவு பேருந்து கட்டணத்தில் மறுசீரமைப்பொன்றை மேற்கொள்ள உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.

இதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை மூன்று ரூபாவால் அதிகரிக்க, அதாவது குறைந்த கட்டணமாக இருந்த ரூபா. 17 கட்டணத்தை ரூபா 20 ஆக அதிகரிக்க அமைச்சரைவை அனுமதி வழங்கியுள்ளதுடன், பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, இந்த எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக நாம் இது வரையிலும் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதற்கு பிரதானகாரணம் சலுகை அடிப்படையிலேயே நாம் புகையிரத சேவையினை மக்களுக்கு வழங்கி வருகின்றோம். அதாவது பேருந்து கட்டணத்தில் 3/1 க்கும் குறைவான கட்டணத்தையே புகையிரத கட்டணமாக அறவிடுகின்றோம்.

இந்த கட்டணத்திலும் 3/1 பங்கே பருவகால சீட்டுகளுக்கு அறவிடப்படுகின்றது. ஏனெனில் பருவகால சீட்டை வைத்திருப்பவர்களே அதிகமாக புகையிரதங்களில் பயணிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,தற்போது ரூபா 55 இனால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புகையிரத கட்டணத்தில் சிறிதளவேனும் மறுசீரமைப்பை மேற்கொள்ளாதவிடத்து, புகையிர திணைக்களத்திற்கு டீசல் கொள்வனவு செய்வதில் நெருக்கடி நிலை ஏற்படும். இதனால், புகையிரத கட்டணத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சசர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: