புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021

சாரதி அனுமதிப்பத்திரத்தை புள்ளிகள் பொறிமுறையுடன் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன் நோக்கம் சாரதிகளை ஒழுங்குபடுத்துவதும் வீதி விபத்துகளைக் குறைப்பதும் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி விபத்துகளால் ஒரு மாதத்தில் மொத்தம் 650 பேர் இறந்துள்ளனர். 30 ஆண்டு கால போரில் நாம் 29ஆயிரம் பேரை இழந்தோம். ஆனால் வீதி விபத்துகள் அதிக உயிர்களைக் காவு கொள்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேநேரம் சாரதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயற்படுத்துவது முக்கிய விடயங்களில் ஒன்றாகும். புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். ஆகவே ஒவ்வொரு முறையும் எவராவது சட்டத்தை மீறும்போது புள்ளிகள் கழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சாரதி ஒருவர் மது அருந்தியிருக்கிறாரா என்பதைக் கண்டறிய அல்லது சாரதி போதைப்பொருள் செல்வாக்கின் கீழ் உள்ளாரா என்பதைக் கண்டறிய போதுமான வளங்கள் எம்மிடம் இல்லை. எனவே இச்செயன்முறையைச் சீராக்க மருந்து கண்டுபிடிப்பாளர்களை இறக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: