புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமரினால் மக்கள் வங்கியின் தலைவரிடம் காசோலை கையளிப்பு!

Thursday, December 9th, 2021

2020 ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9,000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் முதலாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

முதலாவது கட்டத்தின் கீழ் 6,000 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக மக்கள் வங்கியில் சிசு உதான கணக்கினை திறப்பதற்கான 8 கோடியே 98 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்னவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதமர் குறித்த காசோலையை அச்சந்தரப்பத்திலேயே மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் 9,000 பிள்ளைகளுக்கு ஒருவருக்கு தலா 15,000 ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படும்.

1994 ஆம் ஆண்டு தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இந்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசத்தின் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும், தொழிலாளர் பெருமக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் ஒரு உன்னத பணியாக இப்புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.

புலமைப்பரிசில் பெறும் பிள்ளைகளுக்காக குறித்த நிதி மக்கள் வங்கியின் சிசு உதான வங்கிக் கணக்கில் வைப்பிலிடும்போது சாதாரணமாக சிசு உதான வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி வீதத்திற்கும் அதிகமான வட்டி இக்கணக்கிற்கு வழங்கப்படும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: